40 சென்ட் பரப்பில் சொர்ணமசூரி நெல் சாகுபடி செய்யும் முறை குறித்து அந்தோணி அன்புச்செல்வன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...
சொர்ணமசூரி, குறுவைப் பட்டத்துக்கு ஏற்ற ரகம். இதன் வயது 120 நாள்கள். 40 சென்ட் பரப்பில் நடவு செய்ய 2 சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 2 கிலோ சொர்ணமசூரி விதைநெல்லைச் சணல் சாக்கில் போட்டுக் கட்டி, தண்ணீர் தொட்டிக்குள் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடியவிட வேண்டும். ஒரு தனி அறையில் சணல் சாக்கை விரித்து அதன்மேல் விதைநெல் உள்ள சாக்கை வைத்து, சணல் சாக்கு மற்றும் வைக்கோல் கொண்டு மூடி வைக்க வேண்டும். மறுநாள் இந்த விதைநெல்மணிகளில் முளைப்பு எடுத்திருக்கும்.
நாற்றங்காலில் தொழுவுரத்தை இட்டு உழவு செய்ய வேண்டும். பிறகு நாற்றங்காலைச் சேறாக்கி தண்ணீர் கட்டி விதைநெல்லைத் தூவி விதைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 15-ம் நாளுக்கு மேல் 20-ம் நாளுக்குள் நாற்றுகளைப் பிடுங்கி வயலில் நடவு செய்துவிட வேண்டும்.
நடவு வயலில் செழிம்பாகத் தொழுவுரத்தை இட்டு உழவு செய்து நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, நிலத்தைச் சேறாக்கிக் கொண்டு... 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்கவ்யா கலந்த கலவையில் நாற்றின் வேர்ப்பகுதியை மூழ்க வைத்து எடுத்து முக்கால் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தொடர்ந்து வயலின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். நடவு செய்த 8-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் மீது தெளிக்க வேண்டும்.
20-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். பஞ்சகவ்யா, பூச்சிவிரட்டி ஆகியவற்றை 15 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். 20 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 15 மற்றும் 30-ம் நாள்களில் களை எடுக்க வேண்டும்.
80-ம் நாளுக்கு மேல் கதிர்பிடிக்கத் துவங்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி பஞ்சகவ்யா, 100 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் கதிர்களில் பால் பிடித்து 110-ம் நாளுக்கு மேல் முற்றத் துவங்கும். முற்றிய பிறகு அறுவடை செய்யலாம்.
Comments
Post a Comment